கடனிலிருந்து வீட்டை மீட்கப் போராடிய ஓர் தாயின் வெற்றிக்கதை

July 16, 2026
Man in a blue Nike T-shirt stands in a doorway of a weathered gray building; towel on the window.
UNDP Sri Lanka

நோயால் படுத்தபடுக்கையில் இருக்க வேண்டிய சூழலில், தன் குடும்பம் வாழ்நாள் முழுவதும் உழைத்து உருவாக்கிய தம்மிடமிருந்த ஒரே சொத்தான வீட்டை இழக்க நேரிடுமோ என்ற அச்சத்தில் வை.எம். ஷிரானி சொய்சா வாழ்ந்து வந்தார். 

திவுலப்பிட்டிய, விதானமுல்ல பகுதியில் வசித்துவரும் ஷிரானி, இரு பிள்ளைகளின் தாயும், பாடசாலையில் கல்வி கற்கும் நான்கு பேரக்குழந்தைகளின் பாட்டியும் ஆவார். பல ஆண்டுகளாக பக்கவாதம் ஏற்பட்ட நோயாளி ஒருவரைப் பராமரித்து வந்த அவர், பல நேரங்களில் அந்த குடும்பத்திலேயே தங்கி இரவும் பகலும் சேவை செய்தார். அவர் ஈட்டிய வருமானம் அவருக்கு மட்டுமன்றி, சிறிய அளவில் மதிய உணவுப் பொதிகள் தயாரித்து விற்பனை செய்து குடும்பத்தை நடத்திவந்த அவரது மகளுக்கும், பேரக்குழந்தைகளுக்கும் வாழ்வாதாரமாக இருந்தது.

வெளிநாட்டில் வேலைவாய்ப்பிற்காக, அவரது மகன் குடும்ப வீட்டை அடமானம் வைத்து ரூ. 650,000 கடன் பெற்றார். குறைந்த வட்டியுடன் வழங்கப்படும் கடன் என நண்பர் ஒருவரின் அறிமுகத்தின் மூலம் கிடைத்த இந்த வாய்ப்பை குடும்பம் நம்பிக்கையுடன் அணுகியது. ஆரம்பத்தில் இரு மாதக் கடனை தவணை முறையில் செலுத்திய அவர்கள், சுமார் ரூ. 250,000 வரை திருப்பிச் செலுத்தியிருந்தனர். 

வாழ்க்கையை முற்றிலும் புரட்டிப்போட்ட துயர்மிகு சம்பவங்கள். 

மகளின் கருச்சிதைவு, ஷிரானியின் சகோதரரின் மரணம், மற்றும் கொவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் குடும்பத்தை மனதளவிலும் பொருளாதார ரீதியிலும் சோர்வடையச் செய்தன. ஷிரானியால் தனது வேலையைத் தொடர முடியவில்லை. அவரது மகனும் தனது வேலையை இழந்தார். நிலையான வருமானம் இல்லாததால், கடன் தவணைகளை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதன்பின்னர்  இடையறாத அழுத்தநிலை ஆரம்பித்தது.

சில மாதங்களுக்குள், கடன் வழங்கியவர் பணத்தை உடனடியாக திருப்பிச் செலுத்துமாறு கடுமையாக வற்புறுத்தத் தொடங்கினார். குடும்பத்தின் நிலை பற்றி எத்தனை முறை எடுத்துரைத்தும் அழுத்தம் குறையவில்லை. ஏற்கனவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஷிரானி, இந்த மன அழுத்தத்தால் உயர் இரத்த அழுத்தத்திற்கும் உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விரைவில், கோரிக்கைகள் மிரட்டல்களாக மாறின. 

வட்டியுடன் சேர்ந்து ரூ. 1.75 மில்லியனாக உயர்ந்திருந்த தொகையை சில நாட்களுக்குள் செலுத்த வேண்டும், இல்லையெனில் வீட்டை விட்டு வெளியேற வேண்டியிருக்கும் என குடும்பத்திற்கு இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பல ஆண்டுகளாக பற்பல தியாகங்களால் கட்டியெழுப்பிய வீடு பறிக்கப்படக்கூடிய நிலையில் இருந்தது. சிறு பிள்ளைகள் உட்பட முழுக் குடும்பமும் தெருவில் நிற்க வேண்டிய அபாயம் உருவானது. 

“அசல் கடன் தொகையையே திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இருந்தோம். அப்படியிருக்க ரூ. 1.75 மில்லியனை எப்படிச் சம்பாதிப்பது?” என்பது ஷிரானியின் கேள்வியாக இருந்தது. 

காலக்கெடு முடிவடைய சில நாட்களே இருந்தபோது, ஒரு நம்பிக்கை துளிர்த்தது.    நண்பர் ஒருவரின் வழிகாட்டுதலின்படி ஷிரானியின் மகள் கடன் இணக்கச் சபையின் கம்பஹா மாவட்டக்  கிளை அலுவலகத்தை அணுகினார்.

அங்கிருந்த அதிகாரிகள் குடும்பத்தினருக்கு நம்பிக்கையூட்டி, அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு வழிகாட்டினர். 

சட்ட நடைமுறைகள் குறித்து அறிந்திராத   ஷிரானிக்கு இப்பயணம் மிகவும் சவாலானதாக இருந்தது. எனினும் அவர் பெற்ற வழிகாட்டுதல் அனைத்தும் அப்பயணத்தை சுமுகமாக எதிர்கொள்ள வழிவகுத்தது.

“பயப்படாதீர்கள் என்று அவர்கள் எம்மிடம் கூறினர். அதுவே எமக்குத் துணிச்சலைக் கொடுத்தது,” என்று அவர் கூறினார்.

ஆரம்பத்தில் கடன் வழங்கியவர்கள் விசாரணைகளில் பங்கேற்பதைத் தவிர்த்தாலும், பின்னர்  அவர்கள் முன்னிலையாக வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டது.

அக்காலகட்டத்தில்தான் குடும்பம் அதிர்ச்சியூட்டும் ஓர் உண்மையை அறிந்து கொண்டது. நம்பிக்கை காரணமாக கையெழுத்திடப்பட்ட ஆவணங்கள் மூலம், அவர்களின் காணியின் முழு உரிமையையும் கடன் வழங்கியவருக்கு மாற்றப்பட்டிருந்ததை அவர்கள் அறிந்து கொண்டனர். 

இருப்பினும், கடன் இணக்கச் சபை குடும்பத்தின் சார்பில் தலையிட்டு நியாயமான தீர்வுக்காக பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் விளைவாக, 2027 ஆம் ஆண்டு வரை கடனை சுமுகமான நிபந்தனைகளின் கீழ் திருப்பிச் செலுத்தும் வகையில் புதிய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.

ஷிரானி பணியாற்றிய குடும்பம் அவரது நிலைமையை அறிந்து கருணையுடன் உதவிக்கரம் நீட்டியது. அவர் பராமரித்த பக்கவாத நோயாளியின் மகள், ரூ. 800,000 வழங்கி கடனைத் தீர்த்து காணியின் உரிமையை மீட்க உதவினார். அத்தொகை தற்போது ஷிரானியின் சம்பளத்திலிருந்து படிப்படியாக கழிக்கப்பட்டு வருகிறது.

இரு மாதங்களுக்கு முன்பு, பல ஆண்டுகளாக நீடித்த அச்சமும் நிச்சயமற்ற  தன்மையும் நிறைந்த காலத்திற்குப் பிறகு, ஷிரானியால்  தனது வீட்டை மீண்டும் பெற்றுக்கொள்ள முடிந்தது. 

“நான் எப்போதும் பயத்திலேயே வாழ்ந்தேன். ஆனால் இப்போது மனநிம்மதியுடன் இருக்கிறேன். எனக்கு ஏதாவது நடந்தாலும், என் பிள்ளைகளுக்கு வாழ ஒரு வீடு இருக்கும்,” என்று அவர் கூறினார்.

சயாட்டிகா நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், ஷிரானி தனது பராமரிப்பு பணியைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறார். அவரது மகள் தனது தொழிலின் மூலம் நான்கு பிள்ளைகளையும் பராமரித்து வருகிறார். ஒருகாலத்தில் மன அழுத்தமும் நிச்சயமற்ற தன்மையும் நிறைந்திருந்த அந்த குடும்பம், இன்று மீண்டும் நிலைத்தன்மையை நோக்கி முன்னேறி வருகிறது.

ஷிரானியின் வாழ்க்கைப் பயணம் ஒரு முக்கியமான செய்தியை எமக்கு எடுத்துரைக்கிறது

கடன் இணக்கச் சபையின் ஆதரவு அவருக்கு சட்ட ரீதியாக மட்டுமன்றி, மன ரீதியிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அதனால் தான் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன், நீதியமைச்சின் கூட்டாண்மையில், UNDP மற்றும் UNICEF SRI LANKA வினால் நடைமுறைப்படுத்தப்படும் JURE செயற்திட்டம், கடன் இணக்கச் சபையின் சேவைகளை இன்னும் மேம்படுத்தி, திறன் மேம்பாடு, புதிய  வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைசாத்தியமான ஆதரவை ஷிரானி போன்ற பிரஜைகளுக்காக வழங்கி வருகிறது.

“நாம் தனித்து நின்று செயற்பட முடியாத நேரத்தில் அவர்கள் எமக்குத் துணையாக  நின்றார்கள்,” என்று ஷிரானி கூறுகிறார்.

"எங்கு செல்ல வேண்டும் என்று தெரியாத ஒரே காரணத்திற்காக யாரும் தங்கள் வீட்டை இழக்கும் நிலைக்கு உள்ளாகக்கூடாது."

"எனவே இதேபோன்ற சிரமங்களை எதிர்கொள்ளும் மற்றவர்களும் தாமதிக்காமல் சரியான உதவியை நாட வேண்டும்" என்பதே அவரது விருப்பமாகும்.